குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம்: ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் அவதி
குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகி வருகின்றனர்.;
உயர்மட்ட பாலம் கட்டும் பணி.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தம்மண்ணன் சாலையில் கழிவுநீர் கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் பல மாதங்களாக கட்டப்பட்டு வருகிறது. மிக முக்கியமான சாலையில் பல மாதங்களாக பாலம் கட்டப்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் பள்ளிபாளையம் சாலை வழியாக சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி சென்று கொண்டிருந்தனர்.
இதனால் கால விரயம், பண விரயம் ஏற்பட்டது. அதனை பொதுமக்கள் பொறுத்துக்கொண்டு சென்று வந்தனர். சில நாட்கள் முன்பு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் இந்த பாதையில் டூவீலர்கள், கார்கள் சென்று வந்தன. தற்போது பாலத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து எந்த வாகனமும் அனுமதிப்பதில்லை.
இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், எந்த வாகனமும் செல்ல முடியாது என்று தெரிந்து இருந்தும், சாலையின் நுழைவுப்பகுதியான பெரிய மாரியம்மன் கோயில் அருகே எவ்வித தடுப்புகளும், தகவல் பலகைகளும் வைக்கவில்லை. இதனால் ஏராளமான கார்கள், டூவீலர்கள் பாலம் வரை சென்று, போக வழியில்லாமல், குறுகிய சாலையில் சிரமப்பட்டு திரும்பி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை தவிர்க்க, பெரிய மாரியம்மன் கோவில் அருகே தகவல் பலகை மற்றும் தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.