பள்ளி பாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி சேலை திருடிய மூதாட்டிகள்
பள்ளிபாளையத்தில் கடை ஊழியரை திசை திருப்பி மூதாட்டிகள் சேலைகள் திருடி சென்றது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.;
பள்ளிபாளையம் ஆர்.எஸ். பிரிவில் ஜவுளி கடை வைத்து இருப்பவர் செந்தில்குமார்(வயது 35.) நேற்று உணவு உண்ண சென்ற நிலையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்தார். அப்போது அங்கு வந்த 3 மூதாட்டிகள் மற்றும் ஒரு முதியவர் சேலை வாங்க போவதாக கூறினார்கள். பெண் ஊழியரை திசை திருப்பி பேச்சு கொடுத்து, ஒவ்வொரு சேலையை காட்டி விலை என்ன? என கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு மூதாட்டி அங்கு தேர்வு செய்து வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட சேலைகளை தன் கால் இடுக்கில் மறைத்துகொண்டுள்ளார். இரண்டு துண்டுகள் மட்டும் வாங்கி கொண்டு அவர்கள் சென்றனர். சேலை எண்ணிக்கை குறைந்ததை கண்ட ஊழியர், உரிமையாளரிடம் கூறி சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதை பார்த்த போது, அந்த கும்பல் சேலைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்க, பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.