பசுந்தாள் உரவிதைகளை மானிய விலையில் பெற வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை

மண் வளத்தைக் கூட்டி மகசூலை அதிகரிக்க செய்யும் பசுந்தாள் உரவிதைகளை மானிய விலையில் பெற்று பயனடைய வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.;

Update: 2024-06-07 15:00 GMT

பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:  பள்ளிபாளையம் வட்டாரத்தில் 2024-2025 –ஆம் ஆண்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தியினைஊக்குவித்தல் திட்டம் செயல்படவுள்ளது.

குத்தகைதாரர் உட்பட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர். ஒரு பயனாளி விவசாயி இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்க 20 கிலோ வரை பெற முடியும்.

தற்போதுள்ள வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துக்களை அதிகம் உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்வதாலும், இரசாயண உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் போன்றவைகளை பயன்படுத்துவதாலும் மற்றும் இயற்கைஉரங்களை அதிக அளவில் பயன்படுத்தாமல் இருப்பதாலும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து, மண் வளம் குன்றி அதிக அளவில் களர், உவர், அமில நிலங்களாக மாறியுள்ளன.

எனவே பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து நிலத்தில் உழுது, மக்க வைத்து மண் வளத்தைக் கூட்ட ஏதுவாக அனைத்து விவசாயிகளுக்கும் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ முழு விலை ரூ. 99.50 ஆக உள்ள நிலையில், இதற்கு மானியமாக ரூ.49.75 வழங்கபடுகிறது. விவசாயி பங்கு தொகை ரூ.49.75 ஆகும்.

பசுந்தாள் உர பயிர்கள் வளம் குன்றிய மண்ணிலும் நன்கு வளரும். இது அதிவேகமாக வளரக் கூடியபயிர் என்பதால் பயிர் சுழற்சியில் பயிர் செய்யலாம். இது எளிதில் மட்கக் கூடியது. இவை மண்ணில் பொலபொலப்பு தன்மையை அதிகரிக்கிறது. நுண்ணுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கிறது.

ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதால் நிலத்தில் உள்ள களர், உவர் தன்மைகளை மாற்றுகிறது. மண்ணில் அங்கக கரிம சத்தின் அளவை அதிகரிக்கிறது மற்றும் நிலத்தில் பல்வேறு வகையான ஊட்டசத்துகளை உருவாக்குகிறது. மொத்தத்தில் பசுந்தாள் உர பயிர்கள் மண்வளத்தைக் கூட்டி மகசூலை அதிகரிக்க செய்கிறது. எனவே விவசாயிகள் மானியத்தில் பசுந்தாள் உர விதைகளை வேளாண்மை விரிவாக்கமையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலும் பெற்று பயனடையலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News