அரசு கலை கல்லூரியில் முப்பெரும் விழா
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.;
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக ராசிபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பானுமதி, காவல் ஆய்வாளர்ர் ரவி, அரசு பி.எட். கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் ஆகியோர் பங்கேற்று , பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கினர் வாழ்த்திப் பேசினர்.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியர்கள் ரமேஸ்குமார், ரகுபதி, ஞானதீபன், சரவணாதேவி, தமிழ்மன்ற செயலர் மோகன்ராஜ், விளையாட்டு துறைசெயலர் புவனேஸ்வரி, மாணவர் பேரவை தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
கல்லூரி முதல்வர் பேசுகையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே நான் முதல்வன் இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன.
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும் எனக் குறிப்பிட்டார்.