குமாரபாளையம் அருகே ரேஷன் கடையில் தடுப்பூசி சான்றிதழ் கேட்டதால் பரபரப்பு
குமாரபாளையம் அருகே ரேசன் கடையில் தடுப்பூசி சான்றிதழ் கேட்டதையடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
குமாரபாளையம் உழவர் சந்தை பின்புறம் 3வது வார்டு ரேஷன் கடை உள்ளது. இங்குள்ள பணியாளர் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது.
அப்போது அதே பகுதியை சரவணன், 38, என்பவர் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். அவரிடம் விற்பனையாளர் பக்கிரிசாமி, தடுப்பூசி சான்றிதழ் கேட்க, மறுமுறை வரும்போது தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு விற்பனையாளர் மறுத்துள்ளார்.
இது போல் அனைவரிடமும் விற்பனையாளர் தடுப்பூசி சான்றிதழ் கேட்தால், பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி உள்ளிட்ட கட்சியினர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.ஒ. சித்ரா, ஆர்.ஐ. ராஜன் நேரில் வந்து தடுப்பூசி சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என்பதை தெளிவு படுத்தியதுடன், பணியாளர் பக்கிரிசாமியிடம் இது போல் பொதுமக்களிடம் சொல்லக்கூடாது என்றும், பொருட்கள் தவறாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
பின்னர் சரவணன் அங்கிருந்து பணியாற்றும் விசைத்தறி கூடத்திற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து விசைத்தறி கூடத்துக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த அழகேசன், வடிவேல் இருவரும் சரவணனை அழைத்து, நீ என்ன மக்கள் பிரதிநிதியா? பொதுமக்களுக்கு வக்காலத்து வாங்கும் வேலை செய்யக்கூடாது என்று சரவணனை தகாத வார்த்தையில் பேசி, அடிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன், அழகேசன், வடிவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குமாரபாளையம் போலீசில் இது குறித்து புகார் மனு கொடுத்துள்ளார். இவருடன் தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி உள்ளிட்ட கட்சியினர் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.