குமாரபாளையம் அருகே ரேஷன் கடை நிர்பந்தத்தால் தடுப்பூசி போட்ட முதியவர் பாதிப்பு
குமாரபாளையம் அருகே ரேஷன் கடை நிர்பந்தத்தால் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் பாதிப்புக்குள்ளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ், 62, கூலித்தொழிலாளி. இவர் பலரது கருத்தை கேட்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளியூர் செல்வதோ, பொது இடங்களில் வந்தாலோ தடுப்பூசி அவசியம் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.
மேலும், ரேஷன் கடையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என வதந்தி பரவியதால், சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்.
தடுப்பூசி போட்ட நாள் முதலே அரிப்பு ஏற்பட்டு துன்பப்பட்டு வந்த இவருக்கு, தற்போது உடல் முழுதும் தடிப்பு ஏற்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதுபோன்ற நபர்களின் குறையை போக்கி, தடுப்பூசி பாதுகாப்பின் நன்மை மற்றும் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டி இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர் போன்று தடுப்பூசி போடாமல் அச்சத்துடன் இருக்கும் நபர்களுக்கு இவரின் இந்த நிலை மிகுந்த அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்வதாக உள்ளது.