குமாரபாளையம் அரசு மருத்துவமனை முன்பு கழிவு நீர் வெளியேறும் அவலம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனை முன்பு கழிவு நீர் வெளியேறி வருகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம்-இடைப்பாடி சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவுப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பல லட்ச ரூபாய் மதிப்பிலான வடிகால் அமைக்கப் பட்டது.
அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கூடம் அருகே கழிவுநீர் வெளியேறும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இது வடிகாலுடன் முழுமையாக இணைக்கப்படவில்லை. இதனால் கழிவு நீர் அனைத்தும் மருத்துவமனை நுழைவுப்பகுதியில் சாலையில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதன் துர்நாற்றம் மருத்துவமனைக்கு வருவோர், அவ்வழியில் செல்வோர் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களையும் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டிய மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ள மருத்துவமனை கழிவுநீர் குழாயை உடனே சீர்படுத்தி கழிவுநீர் சாலையில் பரவாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மருத்துவமனை நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.