கடனை திருப்பி செலுத்த தாமதம்: ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள்
குமாரபாளையம் அருகே வங்கி கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை பகுதியில் உள்ள ஒருவர் குமாரபாளையம் தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார். இதை செலுத்த தாமதம் ஏற்பட்டதால், வங்கி நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, ஜப்தி உத்திரவு பெற்று வந்தனர்.
பல கோடி மதிப்புள்ள சொத்தினை பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் வந்தனர். சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் என பெரும்பாலோர் திரண்டிருந்தனர். சூழ்நிலை அறிந்து முன்னதாக இவர்கள் செலுத்த வேண்டிய தொகை செலுத்தியும், சொத்தினை பறிமுதல் செய்யக் கூடாது என்றனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், சொத்தினை பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் முயன்றனர்.
தை பண்டிகை சமயம் என்பதால், ஜன.20 வரை காலஅவகாசம் கேட்டனர். டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் மலர்விழி, டேவிட், சந்தியா, தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சொத்தின் உரிமையாளர்கள் வேண்டுகோள்படி, வங்கி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் சார்பில் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது.