குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் பொங்கல் விழா
குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் பொங்கல் விழா சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள, தாளங்களுடன் நடைபெற்றது. மஞ்சள் ஆடை அணிந்தவாறு பக்தர்கள் தீர்த்தக்குடங்கள், அக்னி சட்டிகள் எடுத்தவாறு பங்கேற்றனர். மார்க்கெட் வளாகத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. சேர்மன் விஜய்கண்ணன் அன்னதானம் வழங்கினார்.
சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஆண்டுதோறும் ஆண்டுவிழா மற்றும் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா வந்தது முதல் காய்கறி வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். கூட்டம் சேரும் இடம் என்றும், கொரொனோ பரவும் இடம் என்றும் படாதபாடு படுத்தினர் நகராட்சி நிர்வாகத்தினர். வழக்கமான இடத்தில் இருந்து அருகில் உள்ள பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்கு மாற்றினர். இதனால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை பாதுகாக்க பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர். அதனையும் பொறுத்துகொண்டு வியாபாரம் செய்து வந்தனர். சில மாதங்கள் கழித்து வழக்கம் போல் பழைய மார்க்கெட்டில் காய்கறி கடைகள் செயல்படும் என்றனர்.
மீண்டும் அனைத்து உடைமைகளை தூக்கி கொண்டு பழைய மார்க்கெட் கடைகளுக்கு வந்தனர். புதிய நகராட்சி நிர்வாகம் பதவிக்கு வந்தது. வந்தாஹ் சில மாதங்களில் மார்க்கெட் ஐ புனரமைக்க போகிறோம். அதனால் பஸ் ஸ்டாண்டிற்கு மீண்டும் கடைகளை மாற்றுகிறோம், என்றனர். செய்வதறியாது அதற்கும் சரி என்று தற்போது மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் பொருட்களை வாங்கி, அதனை விற்பதற்குள் சில நாட்கள் ஆனால், அந்த நஷ்டம் வியாபாரியை தான் சேரும். கடன் கொடுப்போர் வசம் காலையில் கடன் வாங்கி, காய்கறிகள் விவசாயிகள் வசம் வாங்கி, விற்று மாலையில் வாங்கிய கடனை தீர்க்கும் வியாபாரிகளும் உண்டு. வியாபாரம் எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. எதிர்பார்க்கும் நாளில் பொருட்கள் விற்பனை ஆகாமல் தேங்கும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நாட்களில் வாங்கிய கடனை கூட கட்ட முடியாமல் அதிக வட்டி செலுத்தும் நிலை உருவாகும். செலவாகும் அளவிற்கு வியாபாரம் செய்ய முடியாது. நஷ்டத்திற்கு தான் வியாபாரம் செய்ய முடியும்.
தற்போது மீண்டும் கொரோனா வரவுள்ளதாக கூறி வருகிறார்கள். இப்போதுதான் வியாபாரிகள் சற்று நிம்மதியாக இருந்து வந்தனர். மீண்டும் கொரோனா என்பதால் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர்.
குமாரபாளையம் நகரில் வாரச்சந்தையில் பிரதி வெள்ளிகிழமை கூடுவது வழக்கம். அதை விட்டால் மற்ற நாட்களில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வந்து பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி வந்தனர். ஆனால் தற்போது எம்.ஜி.ஆர், நகர், வட்டமலை,கல்லங்காட்டுவலசு உள்ளிட்ட பல இடங்களில் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் சந்தை கூடுவதால் அந்தந்த பகுதி மக்கள் காய்கறிகள் அங்கு வாங்கி கொள்கிறார்கள். இதனால் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் கஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்த துன்பம் எல்லாம் நீங்க வேண்டியும், மீண்டும் கொரோனா வராமல் இருக்கவும் வேண்டித்தான் பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுன்சிலர் தீபா, குத்தகைதாரர் வெங்கடேசன், செயலர் விஸ்வநாதன், பொருளர் சீனிவாசன், உள்பட பலர் பங்கேற்றனர்.