கட்டணக்குளறுபடியால் 'ஷாக்' - தவிக்கும் மின்பயனாளிகள்!

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மாதத்தில் மின் கணக்கீடு நடைபெறாமல், மின் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி நிலவுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Update: 2021-06-14 13:20 GMT

மின் கட்டணத்தை கட்ட பள்ளிபாளையம் துணைமின் பொறியாளர் அலுவலகத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.

கடந்த மே மாதத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், மின்சார கட்டணம் குறித்த கணக்கீடோ, கட்டுவதற்கான பணிகளோ நடைபெறவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே சூழல் தான் உள்ளது.

இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மின்சார கட்டணம் கணக்கீடு செய்யப்படாததால் கடந்த காலங்களில் உள்ளது போல பழைய கணக்கீட்டு முறைகளை வழி முறைகளை பின்பற்றியோ, அல்லது கடந்த மாதத்தில் கட்டிய தொகையை திரும்பக் கட்டுவது மற்றும் தங்கள் வீடுகளில் பதிவாகியுள்ள மின்சார யூனிட்டுகளை கணக்கெடுத்து, அதன் மூலம் மின் கட்டணத்தை கட்டுவது என சில வழிமுறைகளை, தெரிவித்திருந்தது.

ஆனாலும், பெரும் பகுதி மக்களுக்கு அரசின் இந்த திட்டம் சரியாக சென்றடையவில்லை, அல்லது புரியவில்லை. இதனால், மின் பயனாளிகள் குழப்பத்தில் தவித்து வருகின்றனர். குறிப்பாக, வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு  மின்கட்டணத்தை செலுத்துவது  பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

மின்சார கட்டணம் கட்டுவதற்கான காலக்கெடு முடியும் தருவாயில் உள்ளதால், பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள  மின்சார வாரிய அலுவலகத்தில், மின் கட்டணத்தை கட்டுவதற்கு பொதுமக்கள் குவிந்தனர். மேலும், மின் கட்டண விவகாரத்தில் சரியான வழிமுறைகளை  தமிழக அரசு ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News