காற்று மாசு..தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

காற்று மாசுபாடு தொடர்பான புகார் குறித்து குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.;

Update: 2023-08-17 13:45 GMT

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை .

காற்று மாசுபடுவது தொடர்பான புகாரின் பேரில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில்முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

பள்ளிபாளையம் காகித ஆலை மற்றும் பொன்னி சர்க்கரை ஆலை புகை போக்கியிலிருந்து கரி துகள்கள் பறப்பதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக இருப்பதாக சி.பி.எம். சார்பில் புகார் கூறப்பட்டது. மேலும் இதன் கழிவுநீரால் காவிரி ஆறு மாசடைவதாகவும் புகார் எழுந்தது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி சி.பி.எம். சார்பில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில், வருவாய்த்துறையினர் இதனை தடுத்து நிறுத்தி, நேற்று குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மணிவண்ணன், சேசாயி காகித ஆலை நிர்வாகி அழகர்சாமி, பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகிகள், சி.பி.எம். நிர்வாகி அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:சி.பி.எம். கூறிய புகாரின் படி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சி.பி.எம். கட்சி கூறிய புகாரை சரி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், புகை போக்கியில் வெளியேறும் புகையில், மாசுபாட்டு அளவு குறித்து அறிய கருவிகள் பொருத்தப்பட்டு, டெல்லி மற்றும் சென்னை இணைய வழியில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்படும் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனை சி.பி.எம். நிர்வாகத்தினர் ஏற்றுக் கொண்டு சென்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.




Tags:    

Similar News