சித்தோடு பகுதியில் வேன் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
பவானி அருகே சித்தோட்டில் வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவி உயிரிழந்தார்.;
பவானி அருகே, சித்தோடு பழைய பரோடா வங்கி அருகே வசிப்பவர் செல்வி, 37. கட்டிட கூலித்தொழிலாளி. இவர் தன்து கணவர் அய்யாசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, சித்தோட்டில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். செல்வியுடன் அவரது மகள்கள் அபர்ணா, 17, தாரணி, 13 ஆகியோரும் உள்ளனர்.
செல்வியின் இளையமகள் தாரணி, நேற்று முன்தினம் இரவு 07:30 மணியளவில், தனது தோழியை சந்தித்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். அதே பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த ஆவின் வாகனம் தாரணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தாரணி, சம்பவ இடத்தில் பலியானார்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பவானி சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன், எஸ்.ஐ. வடிவேல்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.