குமாரபாளையம் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சுயேச்சையாக போட்டியிட முடிவு
குமாரபாளையம் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த பா.ஜ.க., மாவட்ட செயலாளர், சுயேச்சையாக போட்டி இட முடிவு செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மாவட்டச்செயலாளராக பொறுப்பு வகிப்பவர் ஓம் சரவணா. இவர் குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கும்படி பாஜக தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், குமாரபாளையம் தொகுதி கூட்டணி கட்சியான அ.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
ஆனால், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஓம் சரவணன் குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே, பல்வேறு பணிகளுக்கிடையேயும் பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கி மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க கடும் முயற்சிகள் எடுத்து வந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.கவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்தது. கூட்டணி அறிவிப்பின்படி குமாரபாளையம் தொகுதி அ.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் அமைச்சர் தங்கமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் ஓம். சரவணாவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். மாவட்ட செயலாளர் ஓம் சரவணாவும் கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்தார். அதனால், அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்தார். அதன்பின் இன்று காலை 7 மணி முதல் குமாரபாளையத்தில் உள்ள காவேரி நகரில் வீடு வீடாக சென்று தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.