குமாரபாளையத்தில் ஐயப்பன் திருவீதி உலா: சிறப்பு அபிஷேக வழிபாடு
குமாரபாளையத்தில் ஐயப்பன் திருவீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது.
குமாரபாளையம் ஐயப்ப சுவாமி பிரார்த்தனை மண்டபம் சார்பில் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி அருள்பாலித்தவாறு வந்தார். ஐயப்ப சுவாமி பிரார்த்தனை மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட பல அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஐயப்ப குருசாமிகள் கூறியதாவது:
சிவனுக்கும் மோகினி ரூபமான விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர் ஐயப்பன். பம்பா நதிக்கரையில் பந்தள அரசன் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். பிள்ளை இல்லாத தனக்கு கடவுளாக கொடுத்த பிள்ளை என்று மகிழ்ந்தார் பந்தள மன்னன். கழுத்தில் மணியோடு பிறந்தவருக்கு மணிகண்டன் என்று பெயர்சூட்டி வளர்த்தார் பந்தள மன்னன். மணிகண்டன் வந்த நேரம் செல்வ செழிப்பு அதிகரித்தது, பந்தள ராணிக்கும் குழந்தையும் பிறந்தது. நாட்கள் செல்லச் செல்ல விதி அரசி ரூபத்தில் விளையாடியது. தனது மகனை அரசனாக்க வேண்டும் என்பதற்காக மணிகண்டனை தவிர்த்து வந்தாள் அரசி. தலைவலியால் அவதிப்படுவதாக பொய்யாக கூறி நடித்தாள். அரசவை வைத்தியரை கைக்குள் போட்டுக்கொண்டு தலை வலிக்கு புலிப்பால் குடித்தால் மட்டுமே நோய் தீரும் எனக் கூற வைத்தாள்.
தாயின் நோய் தீர புலிப்பால் கொண்டு வர வனத்திற்கு புறப்பட்டார் சிறுவனாக இருந்த மணிகண்டன். தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்ண எடுத்துச் செல்லும் உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினார். முக்கண்ணனான சிவனின் அம்சம் போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார். இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றார்.
காட்டுக்கு செல்லும் வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலிகளாக புடை சூழ புலிமேல் ஏறி பந்தள நாட்டுக்குச் சென்றார் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.அவதார நாயகன் தர்ம சாஸ்தா அய்யன், தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் ஐயப்பன்.
ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தள மன்னன் செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார். நெய்யில் செய்த பலகாரங்களைக் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. தேங்காய்க்குள் நெய் ஊற்றிக்கொண்டு சென்றால் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடிகட்டி செல்லும் போது நெய் தேங்காய் கொண்டு செல்வது முக்கியமான ஒன்றாகிவிட்டது. நெய் தேங்காய் கொண்டு போய் அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து விட்டு அதை பிரசாதமாக வீட்டிற்குக் கொண்டு செல்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் சிலை கடந்த 1800ஆம் ஆண்டு வரை மரத்தால் செய்யப்பட்ட தாரு சிலை ஆக தான் இருந்தது. அதன் காரணமாக அப்போது வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய் அங்குள்ள நெய்த்தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது. இப்போதும் கூட பழைய முறையைப் பின்பற்றக்கூடிய கேரள ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யாமல், நெய் தோணியில் கொட்டிவிட்டு, அதிலிருந்து சிறிது நெய் பிரசாதமாக கொண்டு வருவது வழக்கமாக உள்ளது. தற்போது நேரடியாக ஐயப்ப சாமி சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.