அரசு கல்லூரியில் கூடிய முன்னாள் மாணவர்கள்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடி மகிழ்ந்தனர்;

Update: 2023-03-22 09:15 GMT

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரேணுகா பேசினார்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று, தங்கள் கல்லூரி நினைவுகளையும், தற்போது கிடைத்த தொழில் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். பேராசிரிய பெருமக்களுக்கு முன்னாள் மாணவ, மாணவியர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:

ஆசிரியர்கள் பணி என்பது ஏணியை போன்றது. வருவோரை ஏற்றிவிட்டு ஏணி நின்று கொண்டுதான் இருக்கும். அது போல் மணாவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு வாழ்வில் உயர செய்து, தான் மட்டும் அதே இடத்தில் இருந்து வருவார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முதல்வர் ரேணுகா பேசியதாவது:மாணவர்கள் எங்கள் பிள்ளைகள். அவர்களை முன்னேற்றுவதில் எங்களுக்கு கடமை உள்ளது. அதனை நிறைவாக செய்து வருகிறோம். முன்னாள் மாணவர்களான உங்களிடம், யாராவது தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்க அபிப்ராயம் கேட்கும் போது, தாங்கள் எங்கள் கல்லூரியை சொல்லி அதிக மாணவ, மாணவிகள் சேர்ந்து கல்வி பயில உதவ வேண்டும்.

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர்கள், உயர்கல்வி பயில, வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர் 100 பேர், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவர்களை அரசு கல்லூரி மாணவ, மாணவியர் நடனத்துடன் வரவேற்றனர். கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், எதற்காக இந்த பயணம்? என்பது குறித்து பேசப்பட்டது.

அதன் பின் வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினோம். அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து, அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்திரவின்படி நடத்தப்பட்டது. இவ்வாறு முதல்வர் ரேணுகா பேசினார்.மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.


Tags:    

Similar News