அருந்ததியர் குடியிருப்பில் அத்தியா வசிய பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை
குமாரபாளையம் அருந்ததியர் பகுதியில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளவதற்காக நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்தார்;
அருந்ததியர் வசிக்கும் பகுதியில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்த நகராட்சி தலைவர்
குமாரபாளையம் அருந்ததியர் பகுதியில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள நகராட்சி தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க குமாரபாளையம் நகராட்சியில் அருந்ததியர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் வசிக்கும் 1வது வார்டு காந்தியடிகள் தெரு, பூசாரிக்காடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி, பொது கழிப்பிட பராமரிப்பு, தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலை வசதி, சமுதாயக்கூடம், உடற்பயிற்சி நிலையங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பார்வையிட்டார். மேற்கண்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு உரிய வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நகராட்சி தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் கழிவுநீர் தொட்டி தூய்மை படுத்துவது குறித்து நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கூறியதாவது:
நகராட்சி பகுதிக்குட்பட்ட குடியுருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்கு நகராட்சிக்கு சொந்தமான வாகனம் அல்லது நகராட்சி மூலம் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக 14420 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம் 2013 கீழ் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதர்களை பயன்படுத்தினால், அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
அதிக பட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள் ஈடுபடும் பொழுது, உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் அல்லது நகராட்சியால் உரிமம் பெற்ற வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, 1வது வார்டு திருமூர்த்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருந்ததியர் பகுதியில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள நகராட்சி தலைவர் பார்வையிட்டார்.