குமாரபாளையத்தில் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்துக்கள்
குமாரபாளையம் பகுதியில் பல்வேறு சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.;
குமாரபாளையம் பகுதியில் பல்வேறு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரில் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகம் நடந்து வருகிறது. ஆனால் இந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
நேற்று மாலை 4 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் மீது, அவ்வழியே சென்ற வாகனம் மோதி படுகாயமடைந்தார். விபத்துக்கு காரணமான வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
சாலை ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்ற வேண்டும். அப்போதுதான் விபத்துக்கள் குறையும். தாலுக்கா அந்தஸ்து பெற்ற குமாரபாளையம் நகருக்குள் போக்குவரத்து சீர் செய்ய எந்த போக்குவரத்து போலீசாரும் வருவது இல்லை. திருச்செங்கோடு, சங்ககிரி, பவானி உள்ளிட்ட தாலுக்கா அலுவலகம் உள்ள ஊர்களில் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களில், போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்து சரி செய்து வருகின்றனர். ஆனால் கடும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வரும் நிலையிலும், மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து போலீசார் நியமனம் செய்யாமல் இருப்பது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.