குமாரபாளையத்தில் வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை
குமாரபாளையத்தில் வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
பைல் படம்.
குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் 7 சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. பல பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். பொதுமக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு வேகத்தடை அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள், மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதே பகுதியில் எந்த சாலை எங்கு செல்கிறது என்பது தெரியாததால், கவுரி தியேட்டர் 7 சாலைகள் சந்திக்கும் பகுதியில் வழிகாட்டி பலகை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர். பிரகாஷ் :
குமாரபாளையம் நகரில் விசைத்தறி, கைத்தறி ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை வாங்க பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வருகிறார்கள். ஊரின் நுழைவுப்பகுதியில் 7 சாலைகள் ஒரே இடத்தில் இருப்பதால் வியாபாரிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஜவுளித் தொழில் மேம்பட இந்த இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்.
ஜி. சண்முகம் :
குமாரபாளையம் நகரில் இருந்து டீச்சர்ஸ் காலனி சர்வீஸ் சாலை வழியாக சென்றுதான் புறவழிச்சாலையில் ஏறி பவானி செல்ல முடியும். இது எல்லோருக்கும் தெரியாது. எந்த வழிகாட்டி பலகையும் இல்லாததால் புதிதாக வருபவர்கள் தடுமாறி வேறு பாதையில் சென்று மீண்டும் திரும்பி வந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. எனவே இந்த இடத்தில் வழிகாட்டி பலகை அவசியம் அமைக்க வேண்டும்.
எஸ்.ஹரிகிருஷ்ணன் :
குமாரபாளையம் நகரில் விசைத்தறி, கைத்தறிக்கு அடுத்ததாக கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளது. பல மாநிலங்களில் இருந்தும், பல வெளிநாடுகளில் இருந்தும் கல்வி கற்க மாணவ, மாணவியர் குமாரபாளையம் வருகிறார்கள். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் உள்ளதால், மொழி தெரியாத நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இவர்கள் தடுமாறும் நிலை உள்ளது. பின்னர் இவர்களை காண வரும் பெற்றோர்கள், உறவினர்கள் அந்தந்த கல்வி நிறுவனம் செல்ல அவதியுறுகிறார்கள். இந்த இடத்தில் சாலைகள் குறித்த வழிகாட்டி பலகையுடன், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வழிகாட்டி பலகையும் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.