சாலையை கடக்க முயன்றவர் வாகனம் மோதி உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத நபர் சாலையை கடக்கும் போது வாகனம் மோதி உயிரிழந்தார்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், சேலம் கோவை புறவழிச்சாலை, வட்டமலை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர், மாலை 01:00 மணியளவில் சாலையை நடந்து கடந்து சென்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார்.
இவரை உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு இவரை பரிசோத்தித்த டாக்டர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான வாகனம் குறித்தும், இறந்தவர் விபரம் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும்.
பகலில் வெளிச்சம் குறைவாக இருந்தால், பிரகாசமான நிறங்களில் உடை அணிய வேண்டும். இரவு நேரங்களில் ஒளியை பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணிந்து செல்லும் பொழுது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
சிறு குழந்தைகள் நடைபாதைகளில் தனியே செல்ல அனுமதிக்கக் கூடாது. பெற்றோர்கள் நடைப்பாதையில் குழந்தைகளை அழைத்து செல்லும் பொழுது, சாலையில் செல்லும் வாகனத்திற்கும் குழந்தைகளுக்கும் நடுவில் செல்ல வேண்டும்.
நடைபாதைகள் பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டது. அதனை பாதசாரிகள் பயன்படுத்த வேண்டும். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் சாலையின் இடது புறத்தில் பாதசாரிகள் செல்ல வேண்டும்.
ஆபத்துக் காலத்தை தவிர பிறசமயங்களில் வாகனங்கள் பயன்படுத்தும் சாலையில் பாதசாரிகள் செல்லக்கூடாது.மரணம் விளைவிக்கக்கூடிய செயல் என்பதால் சாலை நடுவே செல்லக்கூடாது. சாலையில் செல்லும் பொழுது செய்தித்தாள்களை படித்துக் கொண்டோ விளம்பரங்களை பார்த்துக்கொண்டோ செல்லக்கூடாது.
சாலையை கடக்கும்பொழுது நண்பர்கள் எதிர்பாராமல் பார்த்தவுடன் நலம் விசாரிக்ககூடாது. நடைபாதைக்கு சென்ற பிறகு உங்களின் நல விசாரிப்புகளை தொடரலாம்.பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டும். பேருந்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக சாலை நடுவே செல்ல கூடாது. சாலை தடுப்புகள் உள்ள சாலையில், கடப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாலையை கடந்து செல்லுங்கள். ஓடும் பேருந்தை துரத்திக் கொண்டு ஓடக்கூடாது. விபத்தில்லா நீண்டகால வாழ்க்கைக்கு சாலை விதிகளை கடைபிடித்தால் போதுமானது.