குமாரபாளையத்தில் அடிதடி, கலாட்டாவில் ஈடுபட்ட 8 பேர் கைது
குமாரபாளையத்தில் அடிதடி, கலாட்டாவில் ஈடுபட்ட மும்பை நபர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் நவீன்குமார், 17. இவர் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் தன் பெற்றோரை காண அங்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தனது உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி ஆடிப்பெருக்கையொட்டி, எதிர் தரப்பினர் மும்பையிலிருந்து குமாரபாளையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அதே நாள் இரவு கோட்டைமேடு பகுதியில் பொது இடத்தில் திரைப்படம் போட்டுள்ளனர். அதிக சத்தம் வைத்து படம் ஓட்டியதால், அதே பகுதியை சேர்ந்த நவீன்குமாரின் உறவினர் சதீஷ்குமார், 23, எதிர் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கைகலப்பில் முடிந்தது. இதில் சதீஷ்குமார், நவீன் குமார் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விரைந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. டேவிட் உள்ளிட்ட போலீசார், தகராறில் ஈடுபட்ட அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின் நவீன் குமார் கொடுத்த புகாரின் படி மும்பையை சேர்ந்த சச்சின்,18, விஜய், 21, பழனி, 46, பீபாஸ், 17,கவுசிக், 17, துகாஸ், 17 ஆகிய ஆறு பேர் மீதும், எதிர்தரப்பினர் பழனி கொடுத்த புகாரின்படி நவீன்குமார், 17, சதீஸ்குமார், ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நவீன்குமார் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மற்ற 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.