மத்திய அரசு காரணமின்றி பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி வருகிறது என நாமக்கல்லில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் திமுக எம்பி கனிமொழி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பள்ளிப்பாளையத்தில் திமுகவின் சார்பில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய கனிமொழி, அதிமுக தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, ஸ்டாலின் சொல்வதை தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார்.
பின்னர் குமாரபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் நெசவு தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அமைச்சர் தங்கமணி தனது உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் புதிதாக சாயபட்டறை அமைப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார். மத்திய அரசு காரணமின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருகின்றனர். இதனால் லாரி உள்ளிட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.