நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.;
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் கிராமத்தில் அதே பகுதிகளை சேர்ந்த சிலர் செங்கல் சூளை போடுவதற்கு மணல் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் கிராம மக்களோடு சேர்ந்து கடந்த 4 ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மணல் கடத்தல் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஆய்வு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கர் மணல் கடத்தல் நடைபெறும் இடத்தை நேரில் சென்று காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பு கும்பல் அம்பேத்கர் மீது நேற்றைய தினம் தலை உள்ளிட்ட பகுதிகளில் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அம்பேத்கர் நாகை அரசு தலைமை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் மீது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீகுளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர், அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மணல் கடத்தலில் தொடர்புடைய தாக்குதலில் ஈடுபட்ட கோகூர் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கோபு என்கிற கோபாலகிருஷ்ணன், மகேஷ், உள்ளிட்ட கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உருண்டு புரண்டு கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணல் கடத்தலை காட்டி கொடுத்த நபர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் குற்றம் சாட்டும் எதிர்தரப்பை சேர்ந்த அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கோபு, மகேஷ், குஞ்சப்பன், தங்கம் உள்ளிட்டோர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.