வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழா: நகரத்தார் குல தெய்வ வழிபாடு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர்;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வழிபாடு தடைபட்ட நிலையில் இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை இங்கு வந்து சேர்கின்றனர்.
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றி நடைப்பயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இந்த ஆண்டும் பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுதல்களுக்காகவும், வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர்.
மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு 2,000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.