உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்களிடம் நேரடியாக தெளிவுபடுத்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் குறித்து முடிவு எடுக்கப்படும்

Update: 2021-07-20 04:02 GMT

பேச்சுவார்த்தைக்கு பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்த திருமுல்லைவாசல் மீனவ கிராம தலைவர் காளிதாஸ்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும், அவ்வாறு அனுமதிக்காதபட்சத்தில் தமிழ்நாடு அரசு மீன்பிடித்தொழில் ஒழுங்குமுறை சட்டம் 1983-இன் படி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 21 வகையான சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், சந்திரபாடி, திருமுல்லைவாசல், மடவாமேடு ஆகிய மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் 14 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகள் விவகாரத்தில் சமூக தீர்வு எட்டும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மீனவர்களிடம் பேசி முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்தார். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மீனவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் மற்றும் அரசு அதிகாரிகள் 14 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமுல்லைவாசல் மீனவ கிராம தலைவர் காளிதாஸ், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி தொழில் செய்பவர்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், அவர்களை நாங்களே சிறைபிடிக்க நேரிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்களிடம் நேரடியாக வந்து தெளிவுபடுத்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் குறித்து முடிவு எடுக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு மக்கள் பிரதிநிதியாக வந்திருக்கக்கூடிய நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து உயரதிகாரிகளிடம் பேசியுள்ளோம். கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கூறியது: கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மீன்பிடித் தொழில் தொடர்பாக அரசால் தடைசெய்யப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags:    

Similar News