கொலை முயற்சி வழக்கு: காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் உண்ணாவிரதம்
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் உண்ணாவிரதம் தனியாக மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சங்கரன்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கமித்திரன். வழக்கறிஞரான இவர் நாம் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலம் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து, பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் , தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையை தாலுகா அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். தனியாளாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர் சங்கமித்திரனிடம், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்தார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.