மதுரை அருகே வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் அழகர் கோவில்
மதுரை அருகே அழகர் கோயிலில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அழகர் கோவிலில், வனவிலங்கின் தாகத்தை போக்க 25 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அழகர்கோவிலில் மலைபகுதியில் வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அப்பகுதியில் உள்ள நூபுர கங்கைக்கு இரவு நேரங்களில் தாகத்தை தீர்த்துக் கொள்ளுமாம். அதாவது நூபுர கங்கையிலிருந்து வெறியேறும் தண்ணீரை மலையில் வசிக்கும் வனவிலங்குகள் பயன்படுத்தி வருகின்றன. மழை காலங்களில் நூபுர கங்கையில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்குமாம்.
தற்போது, மதுரை மாவட்டத்தில், மழை இன்றி பகல் பொழுது கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால், அழகர் கோயில் மலையில் வசிக்கும் வனவிலங்குகள், மலையை விட்டு கீழே தண்ணீருக்காக அலைய நேரிடலாம் என கருதிய கோயில் நிர்வாகம் மலைப் பகுதியில் 25 இடங்களில் சிறிய தொட்டி அமைத்து, தினசரி குடிநீரையும் நிரப்பி வருகின்றனர். இந்த தண்ணீர் தொட்டியானது கோயில் வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோயில் நிர்வாகம் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் ஆலயமாக செயல்படுவதை, சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.