அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் வருகின்ற 31-ம் தேதி விண்ணப்பம் அளிக்கலாம்
ஜல்லிக்கட்டு நடத்த மாநகராட்சி முதல் முறையாக ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக, அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென் கால் பாசன விவசாயிகள் சங்கம் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக நேற்று ஜல்லிக்கட்டு கமிட்டியை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிராம கமிட்டி மற்றும் தென் கால் விவசாயிகள் இடையே சமரசம் ஏற்படவில்லை. மதுரை மாநகராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநகராட்சி சார்பாக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளிட்டுள்ளது.ஜல்லிக்கட்டில் மேடை அமைக்கவும், பார்வையாளர்கள் அமரும் இடங்கள் மற்றும் காளைகள் நிற்கும் பகுதி பேரிகார்டு பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பணிகள் செய்ய ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் வருகின்ற 31-ம் தேதி ஒப்பந்த புள்ளி பெற்று விண்ணப்பம் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளிட்டுள்ளது.