கடந்தாண்டு பொங்கலுக்கு ரூ.5000 கேட்ட உதயநிதி எங்கே? செல்லூர் ராஜு
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மதுரையில், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக.
மதுரை மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கூட்டுறவுத்துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில், மதுரை டி.எம். கோர்ட் பகுதியில், அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: மாற்றான் தாய் மணபாங்குடன் மதுரையை பார்த்து வருகிறது திமுக அரசு. சாலை வசதிகள் இல்லாமல், பொதுமக்கள் சிரமம் பட்டு வரும் நிலையில், ரூ. 112 கோடியில் கலைஞர் நூலகம் கட்ட அரசாணை வெளியிட்டுள்ளனர்.
முல்லை பெரியாறு கூட்டுகுடிநீர் திட்டம், வைகை ஆற்று கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு 2500 ரூபாய் கொடுத்தபோது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி 5000 ரூபாய் கொடுக்கச் சொன்னவர்கள், தற்போது, கொரோனா மூன்றாம் அலையே வந்து விட்டது, ஒரு ரூபாயும் வழங்கவில்லை. கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகைக்கடன் ரத்து என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விடுத்து 13 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்து பொதுமக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
தமிழக நிதி அமைச்சர் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்று உள்ளது என்று பேசியவர். இதுகுறித்து, நடவடிக்கை எடுத்திருக்கலாமே? மதுரை மக்கள் ரோஷக்காரர்கள் என்பதை நிரூபிக்க, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற வேண்டும் என்று செல்லூர் ராஜு பேசினார்.