கருப்பு கோவில் கண்மாயில் மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா;
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் 5 மாவட்டத்தை சேர்ந்த மீன் பிடி வீரர்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். இங்கு உள்ள முதலைக்குளம் கருப்பு கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் அருகே முதலை குளம் கண்மாய் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு உள்ள கருப்பு கோவில் வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிய பின்னர் கண்மாயில் மீன் குஞ்சுகளை விட்டுச் செல்வது வழக்கம். இந்தக் கண்மாய் ஏலம் விடுவது இல்லை. வருடந்தோறும் ஐந்து மாவட்டங்களில் நடைபெறும் சந்தைகளில் தாம்பூலம் மாற்றி பின்பு முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெறும் என்று அறிவிப்பார்கள்.
இந்த அறிவிப்பினை ஏற்று வெளி ஊர்களில் இருந்து மீன் பிடி வீரர்கள் முதல் நாள் இரவே கோவிலில் தங்கி இருப்பார்கள். இவர்களுக்கு உணவு மற்றும் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வது வழக்கம் இதேபோல் இந்த ஆண்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பேரில் திருச்சி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேற்று இரவே கருப்பு கோவிலுக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு உணவு ஏற்பாடு வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தனர். இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் இங்குள்ள கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூஜைகள் நடைபெற்ற பின்னர் மூன்று வெடிகள் விடப்படும். முதல் வெடி விட்டவுடன் மீன் பிடி வீரர்கள் தயாராக இருந்தனர். இரண்டாவது வெடி விட்டவுடன் வலைகளை எடுத்து தயாராக இருந்தனர் . மூன்றாவது வெடி விட்டவுடன் கண்மாய்க்குள் மீன் பிடி வீரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினார்கள். இதை ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடி பாண்டி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து பெரியார் பாசன கூட்டமைப்பு தலைவர் எம்பி இராமன் கூறுகையில் கருப்பு கோயில் அருகே கண்மாய் உள்ளது, மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் இது ஒன்று இக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக கண்மாயில் குஞ்சுகளை விட்டுச் செல்வது வழக்கம். இதை பாதுகாத்து வளர்த்து வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடத்தி வருகிறோம். இத்திருவிழாவை 5 மாவட்டத்திற்கு தெரிவிப்போம் இதன்படி முதல் நாள் இரவே வந்துவிடுவார்கள் அவர்களுக்கு உணவு தங்கும் வசதி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொடுப்போம். இந்த ஆண்டு ஒரு மீன் சுமார் 5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த மீன் சாப்பிடுபவர்கள் நோய் குணமடைவதாக எங்களது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்தக் கண்மாய் ஏலம் விடுவது இல்லை. ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்வது யாராக இருந்தாலும் கருப்புசாமியால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள்:
வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோர் கூறும்பொழுது முதலக்குலம் கண்மாயில் மீன்பிடி திருவிழா எங்களது கிராமத்தில் டம் டம் மூலம் தெரிவிப்பார்கள். இந்த அறிவிப்பின் பேரில் நாங்கள் முதலைக்குளம் கிராமத்தில் இரவே வந்து தங்கி இருந்து கருப்பு சாமி கும்பிட்டு முறைப்படி கமண்மாயில் இறங்குவோம். எங்களுக்கு கிடைக்கக்கூடிய மீன்களை கடவுள் கொடுத்ததாக நினைத்து சமைத்து சாப்பிடுவோம். இதனால் எங்களுக்கு நோய்கள் குணமாகிறது, நாங்கள் மட்டுமல்ல இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மக்களும் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் இங்கு வந்து மீன் பிடித்து செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.