காவேரிப்பட்டணம்: வாகனங்களை கழுவி ஆற்றை மாசுபடுத்தும் வாகனஓட்டிகள்
காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் வாகனங்களை கழுவி அசுத்தம் செய்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே செல்லும் தென்பெண்ணை ஆற்றின் நீரை குடிநீருக்காகவும், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பாசனத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆற்றில் வாகனங்களை நேரடியாக இறக்கி கழுவியும், ஆதரவறறோர் குடிசை அமைத்து தங்கியும் அசுத்தம் செய்வதாக குற்றசாட்டு உள்ளது.
இந்த புகாரையடுத்து, ஆற்றின் கரைகளில் கான்கிரீட் கற்கள், இரும்பு கம்பிகள் நடப்பட்டும், கரையோரம் தங்கியிருந்தவர்களை அகற்றியும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், அவ்வாறு அமைக்கப்பட்ட தடுப்புகளை மர்ம நபர்கள் உடைத்த எடுத்து, மீண்டும் ஆற்றில் வாகனங்களை இறக்கி கழுவி வருகின்றனர்.
இதனால் ஆற்று நீர் அசுத்தம் ஆவதுடன், ஆயில், கழிவுகள் உள்ளிட்டவைகள் கலந்து பாசனத்திற்கு உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பன்றிகள் அதிக அளவில் மேய்வதாலும், குப்பை கூளங்கள் கொட்டப்படுவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
உடனடியாக நிரந்தர தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் ஆற்றிற்குள் செல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.