அனைவரும் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த திமுகவை ஆதரியுங்கள்: மதியழகன்
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மதியழகன், அனைவரும் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த திமுகவை ஆதரியுங்கள் என தனது பிரசாரத்தில் தெரிவித்தார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் கிராமம், கிராமமாக சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் போச்சம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ரம்பட்டி, குள்ளனூர், ஜம்புகுட்டப்பட்டி, விளங்காமுடி, மருதேரி, காட்டாகரம், வெப்பாலம்பட்டி, குள்ளம்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் உள்ள 40க்கும் அதிகமான கிராமங்களுக்கு நேரில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வை ரத்து செய்வது. பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் விலை குறைக்கப்படும்.
வீட்டிற்கு மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்த கணக்கு எடுக்கப்படும். அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது. மாணவ, மாணவியருக்கு டேப் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.