புத்துயிர் பெற்று வரும் தெருக்கூத்து கலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் குவிந்து வருவதால் கலைஞர்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கும், நாட்டுப்புற கலைகளுக்கும் ஒரு காலத்தில் தனி மவுசு இருந்தது. கோவில் விழாக்களில் இரவு, விடிய, விடிய நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம் பெறும். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரையில் அனைவரும் விரும்பி பார்த்து ரசிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும். புராதான கதைகளை தங்களின் கண் முன்பு இப்படி தான் நடந்திருக்கும் என்று கூறத்தக்க வகையில், தத்ரூபமாக கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இருக்கும். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி மவுசு இருந்தது.
தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டிற்கு எப்படியோ, அதை போல கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு மவுசு உண்டு. ஆனால் காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. தியேட்டர், டி.வி. மோகத்தாலும், செல்போன்களின் தாக்கத்தாலும் பலரும் கிராமிய கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதை குறைக்க தொடங்கினார்கள்.
இந்த நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்று நோய் காரணமாக வந்த ஊரடங்கு மக்களுக்கு பல பாடத்தை உணர்த்தி உள்ளது. அதில் ஒன்று தான் மீண்டும் நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை ரசிக்கும் பழக்கம் தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடந்த மக்களுக்கு ஒரே ஆறுதலாக கிராம பகுதிகளில் நடந்து வரும் திருவிழாக்களும், தெரு கூத்து கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் தான்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பாரத கோவில்களில் நாட்டுப்புற கலைஞர்களின் துரியோதனன் படுதளம், அர்ஜூணன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடக நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதை ஏராளமான மக்கள் ரசித்து பார்க்க தொடங்கி உள்ளனர். இதற்காக தெருக்கூத்து நடைபெறுவதற்கு முன்பே கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக பாய்களை எடுத்து வந்து இடம் பிடிப்பது இந்த கலை அழியவில்லை என்பதையே கட்டுகிறது.
இது குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் கூறுகையில், நாட்டுப்புற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித்தொகையும், அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.