சந்தன மரம் கடத்தல்: பர்கூரில் மேலும் 4 பேர் கைது
சந்தன மரம் கடத்தல் விவகாரம் தொடர்பாக, பர்கூரில் மேலும் 4 பேரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், குப்பி வட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தன மரங்களை, 15 பேர் கொண்ட கும்பல் வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனத்துறையினர், கடத்தல் கும்பலை சுட்டு பிடித்தனர். மூன்று பேர் தவிர மற்றவர்கள் தப்பிவிட்டனர்.
கைதான மூன்று பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி இருளர் காலனியை சேர்ந்த மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா, என்பது தெரிந்தது. அவர்களுடன் தமிழகம் வந்த கர்நாடக போலீசார், வேப்பனஹள்ளி, பர்கூர் பகுதியில் விசாரணை நடத்தினர். கர்நாடக மாநிலம் தும்கூர் வனசரகர் துக்கப்பா, குப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடாப் உள்ளிட்ட குழுவினர், இன்று பர்கூர் பகுதியில் மேலும் நான்கு பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், வாணியம்பாடி தேவன், திருப்பத்தூர் தினேஷ்குமார், பர்கூர், குண்டல குட்டையைச் சேர்ந்த முனியப்பன், நேரிடமானபள்ளியைச் சேர்ந்த பச்சையப்பன் என தெரிந்தது. கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் சிலரை கர்நாடக போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.