ஐடிஐ மாணவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பலி!!பொதுமக்கள் சாலை மறியல்
பர்கூர் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய மாணவரின் உடலை மீட்க தாமதமானதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய ஐடிஐ மாணவரின் உடலை மீட்க தாமதமானதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பெரியசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராமசாமி. இவரது மகன் பலராமன். இவர் பர்கூர் ஐ.டி.ஐ.,யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், தனது நண்பர்கள் பத்து பேருடன் செந்தாரப்பள்ளி அருகில் பழைய அரசு கல்குவாரியில் தேங்கியுள்ள குட்டையில் குளிக்க சென்றார். 150 அடி ஆழமுள்ள இந்த குவாரிக் குட்டையில் தற்போது 100 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் பலராமன் மட்டும் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். முழுமையாக நீச்சல் கற்றுக் கொள்ளாத பலராமன் ஆழமான பகுதிக்கு சென்ற போது அவரால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி உள்ளார்.
இதைப் பார்த்த ஒரு இளைஞர், தண்ணீரில் குதித்து பலராமனின் தலை முடியைப் பிடித்து மேலே தூக்கியுள்ளார். ஆனால் பலராமன் அவரை கீழே இழுத்ததால், அந்த இளைஞர் பலராமனை விட்டுவிட்டு மேலே வந்துள்ளார். அதில் பலராமன் நீரில் மூழ்கிவிட்டார். மேலே இருந்த இளைஞர்கள் கிராமத்தில் சென்று தகவல் தெரிவித்தனர். அவர்கள் பர்கூர் தீயணைப்பு நிலைத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு தலைமையில், முன்னணி தீயணைப்பாளர் பழனி உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் குட்டையில் படகில் சென்று கொக்கியை தண்ணீரில் விட்டு தேடினர். இரவு 7 மணி வரை தேடியும் பலராமனின் உடல் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று காலை 6 மணி முதல், பர்கூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்களுடன் மீண்டும் தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தேடுதலை முறையாக நடத்தவில்லை எனக்கூறி பலராமனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காலை திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் செந்தாரப்பள்ளி கூட் ரோடு அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கல்குவாரி அருகே 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால், பர்கூர் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். .