குடிநீர் குழாயில் கூடும் மக்களால் மேலும் கொரோனா பரவும் அபாயம்
வள்ளுவர்புரம் கிராமத்தில் 27 பேருக்கு கொரோனா பரவி உள்ள நிலையில், குடிநீர் குழாயில் மக்கள் கூடுவதால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வள்ளுவர்புரம் கிராமத்தில் 27 பேருக்கு கொரோனா பரவி உள்ள நிலையில் குடிநீர் குழாயில் மக்கள் கூடுவதால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பெலவர்த்தி ஊராட்சிக்கு உட்பட்டது வள்ளுவர்புரம் கிராமம். இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் ஊருக்கு பொதுவாக உள்ள குழாயில் பொதுமக்கள் அனைவரும் தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா முதல் அலையின் போது அதிக அளவில் பாதிக்கப்படாத வள்ளுவர்புரம் கிராமத்தில், கொரோனாவின் 2&வது அலை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கிராமத்தில் மட்டும் 27 பேருக்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தற்போது பர்கூர் பொறியியல் கல்லூரி கொரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் கிராமத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஊரில் பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி தண்ணீர் பிடிப்பதின் மூலம் கொரோனா பரவுவதாக கூறப்படுகிறது. முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவையும் காரணமாக அமைகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையும், ஊராட்சி நிர்வாகமும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.எனவே அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்து, ஒரே நேரத்தில் அதிக பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க கூடுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.