சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: மீட்டுத்தர கோரி எஸ்பி.யிடம் மனு
சீட்டு நடத்தி பல லட்சம் ஏமாற்றியவரிடம் இருந்து பணத்தை மீட்டுதர கோரி, கிருஷ்ணகிரி எஸ்பி.யிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட எஸ்பி. சாய்சரண் தேஜஸ்வியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் சந்தூரில் தையல் கடை நடத்தி வந்தார். அவரிடம் 100க்கும் அதிகமானோர் மாத ஏலச்சீட்டுக்கு பணம் கட்டி வந்தனர். ஆனால் அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் சீட்டு நடத்தவில்லை.
ஏலம் எடுத்தவர்களுக்கு பணமும் கொடுக்கவில்லை. அவர் வீட்டுக்கு சென்ற பார்த்தபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அவரை கண்டுபிடித்து அழைத்து வந்த போலீசார் முன்னிலையில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சீட்டு பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் பணம் தராமல் மீண்டும் தலைமறைவாகிவிட்டார். சீட்டு முடியும் நிலையில், பல லட்சம் ரூபாய் கட்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, கோவிந்தசாமியை கண்டுபிடித்து, அவரிடம் இருந்து சீட்டு பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.