பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில், முதல்போக பாசனத்திற்காக தண்ணீரை பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் மற்றும் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆகியோர் திறந்து வைத்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் முதல்போக பாசனத்திற்காக, தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, 2397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் நவம்பர் மாதம் 12-ம் தேதி முடிய, 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட, முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார்.
அதன்படி, பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கன அடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 20 கன அடி வீதமும் என, மொத்தம் விநாடிக்கு 70 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 135 நாட்களுக்கு, முதல் 5 நாட்களுக்கு நாற்று விட தண்ணீர் விட்ட பிறகு, முறை பாசனம் வைத்து 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் விட்டும் 4 நாட்கள் மதகை மூடிவைத்தும் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் மூலம் போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள 7 ஊராட்சிகளில் பல்வேறு கிராமங்கள், பாசன வசதி பெறும். கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1583.75 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால் பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி மற்றும் தாதம்பட்டி ஆகிய ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கலந்து கொண்டு, தண்ணீரை திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் தருமபுரி செயற்பொறியாளர் குமார், பாரூர் பாசன பிரிவு உதவி பொறியாளர் முருகேசன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், போச்சம்பள்ளி வட்டாட்சியர் முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அனிதா, துணை வட்டாட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.