நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெறுவது எப்படி? விழிப்புணர்வு முகாம்
நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெறுவது குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தில் இன்று நடந்தது.;
இந்த முகாமில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் பேசியதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இவ்வாண்டு நுண்ணீர் பாசனம் செய்ய துவரை, பச்சைப்பயிறு, உளுந்து, காராமணி, நிலக்கடலை, தென்னை ஆகிய பயிர்களுக்கு அரசு மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவுவான் ஆகிய பாசன வசதிகளுடன் நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கலாம்.
இதற்கு, ரூ.40 ஆயிரம், மின் மோட்டார் அல்லது டீசல் மோட்டார் புதிதாக நிறுவ ரூ.15 ஆயிரம் மற்றும் பிவிசி குழாய் பதிக்க ரூ.10 ஆயிரம் அல்லது மொத்த செலவில் 50 சதவீதம் குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும் என்று கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய திட்டங்கள் வேளாண்மை துணை இயக்குநர் கிருஷ்ணன் பேசுகையில், குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் சாகுபடி பயன்பாட்டுத்திறன் மேம்பாட்டல் பயிர் மகசூல் அதிகரிக்கச் செய்கிறது. வறட்சி பாதிப்பின்றி நிலையான வருவாய் என்ற சீரிய நோக்கத்தில், மத்திய அரசு 60 சதவீத நிதி ஒதுக்கீடும், மாநில அரசு 40 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் (ஒரு எக்டேருக்கு) சொட்டு நீர்பாசனம் அமைக்க ரூ. ஒரு லட்சமும், தெளிப்பு நீர் பாசனத்திற்க ரூ.19,600ம், மழைத்தூவுவான் அமைக்க ரூ.31,600ம் மானிய வசதியுடன் பாசன வசதி செய்ய ஆணை வெளியிட்டுள்ளது என்றார்.
இந்த மானியம் பெற, விவசாயி புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை, கிணறு அல்லது ஆழ்துளை கிணறு இருப்பதற்கான சான்று, மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு முடிவுகளை தங்கள் பகுதி உதவி வேளாண்மை வழங்கி, விவசாயிகள் பயன்பெறலாம்.