புலியூர் ஜம்பு ஏரியில் மீன் வளர்க்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் ஜம்பு ஏரியில் மீன் வளர்க்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கோட்டப்பட்டி மற்றும் கீழ்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சேட்டு என்கிற வரதராஜன் தலைமையில் கலெக்டரிம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோட்டப்பட்டி ஊராட்சி புலியூர் ஜம்பு ஏரி இதுநாள் வரை கோட்டப்பட்டி, கீழ்குப்பம் ஊராட்சிகளின் மூலமாக பொது ஏலம் விடப்பட்டு மீன்பிடித்தல் நடந்து வந்தது.
இவ்வாண்டு இந்த ஏரியை கோட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரான கீதா என்பவரின் கணவர் கோவிந்தசாமி, முறையற்ற வழிகளில் மீனவர் சங்கத்தின் சார்பாக ஏலம் எடுத்துவிட்டதாக கூறி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்படுகிறார்.
அத்துடன் அவர் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களை ஏமாற்றி ஜம்பு ஏரியை தனது கட்டுபாட்டிலேயே வைத்து வருகிறார்.
இவ்வாண்டு ஊர் மக்களிடம் ஏரியின் மீது இருந்த கொஞ்ச, நஞ்ச கட்டுப்பாடுகளையும் நீக்கும் வகையில் சம்மந்தமே இல்லாமல் பருவதகுல மீனவர் சங்கம் மூலமாக ஏரியின் ஏலத்தை தன்னிச்சையாக, எவ்வித போட்டியும், அறிவிப்பும் இல்லாமல், மீன்வளத்துறை அதிகாரிகளின் முறை தவறிய ஒத்துழைப்பின் மூலமாக ஏலம் எடுத்துள்ளார்.
எனவே, மேற்படி பருவதகுல மீனவர் சங்கத்தின் மூலமாக கோவிந்தசாமிக்கு அளித்துள்ள புலியூர் ஜம்பு ஏரியின் மீன் வளர்க்கும் உரிமத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.