பர்கூர்: அகழாய்வில் 2500 ஆண்டுக்கு முற்பட்ட இரும்பு வாள் கண்டுபிடிப்பு
பர்கூர் அருகே அகழாய்வின் போது 2500 ஆண்டுக்கு முற்பட்ட 70 செமீ நீளமுள்ள இரும்பு வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு துவங்கப்பட்டது.
தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் சென்னை எம்.ஏ., ஆர்க்கியாலஜி மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த அகழாய்வில், கல்திட்டையில் 70 செ.மீ., நீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றை கண்டறித்தனர்.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: மயிலாடும்பாறை சானாரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 30க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு முன்னோர்கள் எந்த மாதிரியான வாழ்வியல் முறைகளை மேற்கொண்டனர், இவர்கள் எந்த இனக்குழுவை சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டி.என்.ஏ., சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.
கடந்த 1980 மற்றும் 2003ல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில், இது புதிய கற்காலத்தை சேர்ந்த இடம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு கடந்த மூன்று மாதங்களில் ஆய்வு மேற்கொண்டதில் மனித எலும்புகள் எதுவும் நேரடியாக நமக்கு கிடைக்கவில்லை. தற்போது இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 40 செ.மீ. நீளமுள்ள வாளின் முனைப்பகுதி மட்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. வாளின் கைப்பிடி பகுதி இன்னும் எடுக்கவில்லை.
இந்த வாளினை, மண் திட்டை அமைத்து அதன் மேல் வைத்துள்ளனர். இது, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. வாள், ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முடிவுகள் வந்த பிறகே, அதன் சரியான காலத்தை கணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.