சானரப்பன் மலையில் கற்கருவிகளை பட்டை தீட்டும் 11 பள்ளம் கண்டுபிடிப்பு

மயிலாடும்பாறை சானரப்பன் மலையில் 11 கற்கருவிகளை பட்டை தீட்டும் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-17 10:30 GMT

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகளை பட்டை தீட்டும் பள்ளம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறை சானரப்பன் மலையில், 11 கற்கருவிகளைப் பட்டைத் தீட்டும் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:

மயிலாடும்பாறை சானரப்பன் மலையில் உள்ள நெகில் சுனையில், பாறை ஓவியங்கள் உள்ளன. மேலும் சுனையில் தண்ணீர் ஓடும் பாறையில், குரூஸ் (கற்கருவிகளைப் பட்டைத் தீட்டும் பள்ளம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதன் புதிய கற்காலத்திற்கு முன்பு, கற்களை உடைத்து பயன்படுத்தி வந்துள்ளான். முனை உடைந்து விட்டால் அவற்றை தூக்கி எறிந்து விடுவான். ஆனால் புதிய கற்காலத்தில், கற்களை ஒரு வடிவத்தில் உடைத்து, அதை பாறையில் தேய்து ஒரு கூரான வடிவத்தைக் கொண்டு வருவான். கற்கருவிகளை தேய்க்கும் போது முனை உடைந்துவிட்டால் மீண்டும் பாறையில் தேய்த்து முனையை உருவாக்குவான்.

அவ்வாறு கற்களை பாறையில் தேய்கும்போது, ஏற்படும் சூட்டைத் தணிக்க சுனையில் ஓடும் தண்ணீரில் கற்கருவிகளை மூழ்கடித்து, பின்னர் ஒரு பக்கம் கூறாகவும், ஒரு பக்கம் பட்டையாகவும் தேய்து கருவிகளை உருவாக்கி உள்ளான். 2001ல் இங்கு பட்டைத் தீட்டும் பள்ளம் ஒன்றை மட்டுமே கண்டுபிடித்தனர்.

தற்போது இங்கு அகழாய்வு மேற்கொண்ட பின்னர் 11 குரூஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த இடத்தைவிட்டு செல்லாமல், சிறிது சிறிதாக வெளியேறி உள்ளதால், குரூஸ் தவிர வேறு தடயங்கள் எதுவும் இல்லை. அந்த தடயங்களைத் தேடித்தான் அடுத்த கட்ட ஆய்வு சென்று கொண்டிருக்கிறது. தற்போது இந்த சுனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானை ஓடுகளை சுத்தம் செய்து அதில் எழுத்துக்கள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில், தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன், கிருஷ்ணகிரி வரலாற்று குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன்உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News