கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பாலிநாயனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட செட்டிப்பள்ளி கிராமத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.46 லட்சம் மதிப்பில் சாலை தடுப்பு சுவர், பாலம் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. தடுப்பு சுவர் கட்டிய நிலையில் பாலம் கட்டுதவற்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. அதற்காக ஊருக்குள் சென்று வருபவர்கள் வசதிக்காக தற்காலிகமாக அருகில் உள்ள பட்டா நிலத்தில் வழி ஏற்படுத்தப்பட்டது. அந்த நிலத்தின் வழியாக தான் இதுவரை அப்பகுதி பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக பாலம் அமைப்பதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக பாலம் கட்டும் பணியினை தொடங்கி, விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் கூறுகையில், கடந்த பிப்ரவர் மாதம் இப்பணி துவங்கப்பட்டது. கொரோனா தொற்று காலம் என்பதால் பணிகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு, ஓரிரு நாட்களில் பணிகள் துவங்கப்படும். அதைத்தொடர்ந்து பாலம் கட்டும் பணியும், தார் சாலை அமைக்கும் பணியும் நடைபெறும் என்றார்.