பர்கூர் அருகே அகழாய்வு பணி; எம்எல்ஏ., மதியழகன் நேரில் பார்வை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே நடந்து வரும் அகழாய்வு பணியினை மதியழகன் எம்எல்ஏ., இன்று நேரில் பார்வையிட்டார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறை மற்றும் கீழடி, கொந்தகை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் ஆகிய 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, மயிலாடும்பாறையில் தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு துவங்கப்பட்டது. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் ஆய்வு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த அகழாய்வை பர்கூர் திமுக எம்எல்ஏ., மதியழகன் நேரில் சென்று பார்வையிட்டார்.
மயிலாடும்பாறை சானாரப்பன் மலைப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கற்திட்டைகளும், கற்பதுக்கைகளும் உள்ளது. அதில் தற்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 110 செ.மீ., நீளமுள்ள உடைந்த நிலையில் இருந்த வாள், பானைகள், குவளை, இரும்பு கோடாரி, கத்தி, கற்பதுக்கையில் கண்டுபிடித்துள்ள 3 கால்கள் உள்ள 5 குடுவைகள், 4 கத்திகள், ஒரு கிண்ணம் ஆகியவை காட்சி படுத்தப்பட்டிருந்தன.
இவற்றை பார்வையிட்ட எம்எல்ஏ., அது குறித்து மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக் குழுவினர், இந்த அகழாய்வு அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இரண்டாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என எம்எல்ஏ.,விடம், கோரிக்கை விடுத்தனர். இது குறித்து துறை அமைச்சரிடம் பேசி மேற்கொண்டு அகழாய்வுக்கு அனுமதி பெற முயற்சி செய்வதாக எம்எல்ஏ., வாக்குறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று குழுவினர் ரவி, விஜயகுமார், போச்சம்பள்ளி ஒன்றிய திமுக செயலாளர் சாந்தமூர்த்தி, தங்மணி, சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.