மனு கொடுத்த அரை மணி நேரத்தில் விதவை உதவித் தொகை: கரூர் கலெக்டர் அதிரடி
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;
வாரந்தோறும் திங்கட்கிழமை நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆதரவற்ற விதவை உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் முத்தலாடம்பட்டியைச் சேர்ந்த ஹேமா என்பவருக்கு மனு கொடுத்து அரை மணிநேரத்தில் ஆதரவற்ற விதவை உதவித் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு காதொலிக் கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 509 மனுக்கள் பெறப்பட்டது. கடந்த வாரம் வரை கரூர் மாவட்டத்தில் 4,722 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது இதில் நிராகரிக்கப்பட்ட மனுக்களை தவிர மீதமுள்ள 3,633 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைத்து மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, எந்த மனுவும் நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதே நமது கடமை என்பதை அனைத்து துறை அலுவலர்களும் நினைவில் வைத்து ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்துத்தறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.