ஊராட்சி மாத செலவுக்கு ரூ.3836: கதவை பூட்டி நடையை கட்டிய தலைவர்
ஊராட்சி மாத செலவுக்கு ரூ.3,836 அனுப்பியதால் ஊராட்சியை நடத்த முடியாத எனக் கூறி சாவியை ஒப்படைத்தார் ஊராட்சி தலைவர் ஒருவர்.
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணத்தட்டை ஊராட்சி பகுதியில் சுமார் 1,266 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு கடந்த ஆட்சிகளில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இரு மாதத்திற்கு ஒரு முறை பணம் வந்ததாக கூறுகிறார். தற்பொழுது ஊராட்சி நிர்வாகத்திற்கு குறைவான செலவுக்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு ரூபாய் 14 ஆயிரம் அரசு அனுப்பியது, இந்த 2 மாதத்திற்கு மாநில நிதிக்குழு மானியத்தில் (SFC) அனுப்பும் பணத்தை வைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர், மராமத்து பணிகள், குடிநீர் குழாய் பராமரித்தல், தெரு விளக்குகள் பராமரித்தல், சுகாதார பணியாளர்கள் சம்பளம், ஆபரேட்டர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த மாதம் இந்த செலவினங்களுக்காக ரூபாய் 3,836 அரசு அனுப்பியுள்ளது. இதனை கண்ட மணத்தடை ஊராட்சித் தலைவர் ஜெகநாதன் நான் கடந்த மாதங்களில் 12 முறை வாரம் தோறும் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு என்னுடைய சொந்த செலவு செய்துள்ளேன்.
இடி மின்னல் ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பழுதாகி உள்ளது. ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனருக்கு ரூபாய் 4,100 சம்பளம் அளிக்க வேண்டும். மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நான் இந்த 3,836 ரூபாயை வைத்து ஊராட்சி நிர்வாகத்தை எப்படி நடத்துவது எனக் கூறி குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சுப்பிரமணியத்திடம் ஊராட்சி அலுவலகத்தை பூட்டி வந்து சாவியை ஒப்படைத்து நீங்களே ஊராட்சி நிர்வாகத்தை நடத்திக் கொள்ளுங்கள் என கூறி சென்றுவிட்டார்,
இதனால் ஊராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன் ஊராட்சி செயலாளரிடம் அழைத்து சாவியை கொடுத்து ஊராட்சி அலுவலகத்தை திறக்க கூறி அனுப்பி வைத்தார். மணத்தடை ஊராட்சி மன்ற அலுவலகம் பழுதடைந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அருகே உள்ள நூலகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு பணம் ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்படும் பணி துவங்காமல் இருக்கின்றது என அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது, பழைய ஊராட்சி அலுவலகத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை வைத்துள்ளனர்.