புதிய பேருந்து நிலையம் அமைக்க மழலைகள் கோரிக்கை
50 ஆண்டு காலமாக போராடி வரும் மக்களுக்கு புதிய நவீன பஸ் நிலையம் அமைக்க இளம் சிறார்கள் எம்எல்ஏ மாணிக்கத்திடம் கோரிக்கை மனு.;
நவீன பேருந்து நிலையம் அமைக்க கோரி எம்எல்ஏ மாணிக்கத்திடம் மனு கொடுத்த சிறுவர்கள்.
கரூர் மாவட்டம், குளித்தலை முதல்நிலை பேரூராட்சியாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதன் பிறகு 24 வார்டுகள் கொண்ட நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 26 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், குளித்தலை பேருந்து நிலையம் குளித்தலை பேராளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு சுமார் 50 ஆண்டு காலமாக தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்துகள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் வந்து செல்கிறது. இதனால் தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய இடம் இல்லாமல் பேருந்துகள் நின்று செல்வதில் பெரும் சிரமத்துக்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இளம் சிறார்கள் 5 வயது முதல் 10 வயதுள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் சுங்க கேட்டில் இருந்து நடந்து வந்து காவேரி நகரிலுளள சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ மாணிக்கத்தை நேரில் சந்தித்து புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரும் மனு அளித்தனர்.
அந்த மனுவில், நாங்கள் குளித்தலையில் வசிக்கும் பள்ளி குழந்தைகள். குளித்தலை நகரத்தில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50 ஆண்டு காலமாக எங்கள் தாத்தா போராட்டம் நடத்தியிருக்கிறார். எங்கள் அப்பா போராட்டம் நடத்தியிருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது நானும் எனது நண்பர்களும் 22-2- 2019 அன்று.முதலமைச்சராக இருந்த எடப்பாடிபழனிச்சாமிக்கும், குளித்தலை நகராட்சி ஆணையர், மனுக்கள் கொடுத்து போராடினோம்.
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தற்போது பொதுமக்களின் நலனுக்காக பாடுபடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ஆகிய தாங்கள் கோரிக்கை குறித்து எடுத்துக்கூறி குளித்தலைக்கு புதிய நவீன பேருந்து நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.