கரூர் மாவட்டம்; தோகைமலை ஒன்றியக் குழு தலைவர் பதவி பறிப்பால் பரபரப்பு
Karur News,Karur News Today- தோகைமலை ஒன்றியக்குழு தலைவராக இருந்த லதா ரங்கசாமி பதவி பறி போயிருப்பது, கரூர் பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Karur News,Karur News Todayகுளித்தலை அருகே தோகைமலை அதிமுக ஒன்றியக் குழு தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தால், அவரது பதவி பறிக்கப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில், அதிமுக சார்பில் 10 பேரும், திமுக சார்பில் 4 பேரும், பாஜக சார்பில் ஒருவரும் என 15 பேர் ஒன்றிய கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அப்போது ஒன்றியக் குழு தலைவராக லதா ரங்கசாமி தேர்வானார்.
இந்நிலையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து ஆட்சி மாற்றம் வந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. அடுத்த சில மாதங்களில், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில், அதிமுகவை சேர்ந்த துணைத் தலைவர் உட்பட 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். யாரும் எதிர்பாராத வகையில் திமுகவை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர், அதிமுகவிற்கு அணி மாறினார்.
இதனால் தோகைமலை ஒன்றியத்தில் திமுகவின் பலம் 11ஆக அதிகரித்தது. இருப்பினும், ஒன்றியக் குழு தலைவர் பதவியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சூழலில் ஒன்றியக் குழு தலைவரின் கணவரும், தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான ரங்கசாமி ஒன்றிய நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
டெண்டர் மற்றும் ஒன்றிய பொது நிதி பணிகளில் ஊழல் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து ஒன்றியக் குழு தலைவர் லதா ரங்கசாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, பதவி நீக்கம் செய்ய முயற்சி நடந்தது. இதையொட்டி கடந்த மாதம் (பிப்ரவரி) 3ம் தேதி குளித்தலை ஆர்.டி.ஓ புஷ்பா தேவியிடம் தோகைமலை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மனு ஒன்றை அளித்தனர்.
இதன் மீது தோகைமலை ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலில், துணைத் தலைவர் உள்ளிட்ட 12 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதில் 11 திமுக கவுன்சிலர்கள், ஒரு பாஜக கவுன்சிலர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் ஒன்றியக் குழு தலைவருக்கு எதிராக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து தோகைமலை ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் லதா ரங்கசாமி தனது ஒன்றியக் குழு தலைவர் பதவியை இழந்தார்.
கரூர் மாவட்டம், அமைச்சர் செந்தில் பாலாஜி கோட்டை என்று கருதப்படுகிறது. இதனால் அதிமுக தலைவரின் பதவியை காலி செய்யும் விவகாரத்தில் அமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த விவகாரம், கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதுகில் குத்திய பாஜக கவுன்சிலர்.. பதவி இழந்த அதிமுக சேர்மன் குமுறல்
அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் அதிமுக உட்கட்சி பூசலால் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதல் காரணமாகவே தான் பதவி இழந்ததாக கரூர் மாவட்டம் தோகைமலை முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் லதா ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் லதா ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுகவிலிருந்து 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு மாறினர். இதற்கு தோகைமலை ஒன்றிய பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தான் காரணம். நான் ஒன்றியக் குழு தலைவர் பதவியை இழந்தது கூட அதனால் தான். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் உட்கட்சி பூசலால் எனது பதவியை இழந்துள்ளேன். கடந்த காலங்களில் குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுகவின் எக்கு கோட்டையாக இருந்தது.
தோகைமலை ஒன்றியத்தில் அதிமுக பலமான கட்சியாக இருந்த போதிலும் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசலால் அதிமுக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. எனவே கட்சி தலைமை மற்றும் மாவட்டச் செயலாளர் இதில் கவனம் கொண்டு கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுகவில் இருந்த 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு அணி மாறிய போதிலும், கூட்டணி கட்சியாக இருந்த பாஜக கவுன்சிலர் ஆதரவு அளித்ததால் தான் தைரியமாக இருந்தேன். மார்ச் 8ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போதும் பாஜக கவுன்சிலர் எனக்கு ஆதரவு அளிப்பார் என்று பாஜக மாவட்ட தலைவர் மற்றும் மாநிலத் தலைவர் கூறி இருந்த நிலையில், தற்போது அவரும் பணத்திற்காக விலை போய் எனக்கு எதிராக வாக்களித்துள்ளார். என்னை திமுகவிற்கு கட்சி மாற அழைத்த போதிலும் நான் வர முடியாது என மறுத்ததால் எனது கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.