விரட்டும் பறக்கும் காமிரா... ஊரடங்கில் அடங்காதவர்கள் சிதறி ஓட்டம்...
ஊரடங்கிலும் .ஊர் சுற்றுபவர்களை கண்காணிக்க கரூரில் பறக்கும் காமிரா விடப்பட்டுள்ளது. இதனால் பலர் தெறித்து ஓடத்தொடங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது இதையொட்டி மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மீறி அநாவசியமாக வெளியில் வருபவர்கள் மீது வழக்கு பதியப்படும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து தேவையில்லாமல் இரு சக்கர வாகனம் மூலம் வரும் நபர்களை எச்சரிக்கை திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.
குளித்தலை பகுதியிலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது இந்நிலையில் குளித்தலை பகுதியில் அரசின் உத்தரவை மீறி பொதுமக்கள் வெளியே வருவதை வெளிவருவதை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்தனர். குளித்தலை நகர காவல்நிலைய போலீசார் சார்பில் இந்த ட்ரோன் கேமிரா குளித்தலை பேருந்து நிலையம், திருச்சி புறவழிச் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோல காவிரி ஆற்றிலும் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்தனர் அப்போது காவிரி ஆற்றின் கரையோரத்தில் இளைஞர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர் போலீசாரின் ட்ரோன் கேமிரா பறந்து வருவதைக் கண்ட அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தொடர்ந்து ட்ரோன் கேமிரா மூலம் குளித்தலை நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவது கண்காணிக்கப்படும் என்றும் அரசின் உத்தரவை மீறி வெளியில் வந்து கூடும் நபர்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வழக்கு பதியப்படும் என்றனர்.