லாலாபேட்டை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, மோப்ப நாய், வெடிகுண்டை கண்டறியும் கருவிகளுடன் போலீசார் சோதனை நடத்தினர்.;

Update: 2021-11-19 08:45 GMT

லாலாபேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடும் போலீசார்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே பழமையான ரயில்வே கேட் உள்ளது. கரூர் - திருச்சி செல்லும் பிரதான சாலை இடையே இந்த ரயில்வே கேட் உள்ளதால், ரயில் வரும் நேரத்தில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் நிலை இருந்தது. இதையடுத்து லாலாப்பேட்டையில் புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே கேட் அருகே குகைவழிப்பாதை அமைத்த ரயில்வே நிர்வாகம், பழமையான லாலாபேட்டை ரயில்வே கேட்டை மூடிவிட்டனர். இதனால், பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் புறவழி சாலையில் செல்லுமாறும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல பழைய ரயில்வே கேட் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் இல்லையென்றால் ரயில்வே நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மொட்டை கடிதம் லாலாபேட்டை ரயில் நிலையத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில் நிலையம்,  ரயில் பாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  இதையடுத்து மொட்டை கடிதம் எழுதிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News