கரூர்: காவிரி - வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணிகள் கொரோனாவால் நிறுத்தம்!
மழைநீர் வீணாவதை தடுக்கும் வகையில் நடைபெற்று வந்த காவிரி- வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணிகள் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.
காவிரி ஆற்றில் மழை வெள்ள காலங்களில் வரும் அதிகப்படியான தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டும், வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கவும், காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற 5 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரியாற்றில் கதவணை கட்டப்பட்டது.
இந்த கதவணையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை வாய்க்கால் வெட்ட முடிவு செய்யப்பட்டது அதற்காக கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் திருக்காம்புலியூர் கிராமத்தில் 50 ஏக்கர் அளவிலும், மகாதானபுரம் வடக்கு தெற்கு சிந்தலவாடி எல்லப்பாளையம் ஆகிய கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்தது .
முதலில் மாயனூர் கதவணை தென்கரை வாய்க்காலில் இணைக்கும் வகையில் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 18 கிலோ மீட்டர் தூரம் வாய்க்கால் வெட்டும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது. 100 மீட்டர் அகலத்தில் வாய்க்கால் வெட்டப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சி ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பகுதியில் சுமார் 122 கோடி ரூபாய் செலவில் வாய்க்கால் வெட்டும் பணி துவங்கியது. அந்த பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் முக்கிய பணிகள் இருந்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊருக்கு சென்றுவிட்டனர். எனவே வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு வாபஸ் பெறும் போதுமீண்டும் பணிகள் தூங்கும் என கூறினார்.